×

உலக கவிஞர் தினத்தையொட்டி மாங்குடியில் சங்கப்புலவர் மருதனார் நினைவுத்தூணிற்கு கலெக்டர் மரியாதை

தென்காசி, ஏப்.30: உலகக் கவிஞர் தினத்தையொட்டி மாங்குடியில் சங்கப்புலவர் மருதனார் நினைவுத் தூணிற்கு கலெக்டர் கமல்கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 134வது பிறந்த நாள் உலகக் கவிஞர் தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி உலக கவிஞர் தினத்தில் புலவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அந்தவகையில் சங்கப்புலவர்களில் தனித்த சிறப்போடு விளங்கியவர் தென்காசி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் பிறந்த மாங்குடி மருதனார் ஆவார். இவர் இயற்றிய 13 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்களில் இவரது பாடல்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இத்தகைய சிறப்புகளை உடைய மாங்குடி மருதனாருக்கு 1992ம் ஆண்டு தமிழக அரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் புலவராக இருந்தவர். புறநானூற்றில் இவரது பெயர் மாங்குடி கிழார் என்று உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு வாழ்வின் நிலையாமைப் பொருளுணர்த்த மதுரைக்காஞ்சி எழுதப்பட்டது. மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும். இந்த நூல் பண்டைய மதுரையின் உன்னதங்களின் சாட்சியாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்குடி மருதனாரின் நினைவுத்தூணிற்கு கலெக்டர் கமல்கிஷோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை மண்டலத் துணை இயக்குநர் சுந்தர், ஆர்டிஓ கவிதா, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post உலக கவிஞர் தினத்தையொட்டி மாங்குடியில் சங்கப்புலவர் மருதனார் நினைவுத்தூணிற்கு கலெக்டர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Sangappulavar Marudanar ,Mangudi ,World Poets Day ,Tenkasi ,Collector ,Kamal Kishore ,Bharathidasan ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மணல் ஏற்றி வந்தவர் கைது